top of page
2.png

St.Devasahayam's favourite resting place while he was living in this world ✨ புனித தேவசகாயர் வாழ்ந்த காலத்தில், அவர் இளைப்பாறிய இடம் ✨ World's First church dedicated to St.Devasahayam ✨ புனித தேவவசகாயருக்காக கட்டப்பட்ட உலகத்தின் முதல் ஆலயம் ✨ Thattarmadam - Land of Miracles ✨

St.Devasahayam Shrine, Thattarmadam

Thattarmadm Parish History

தட்டார்மடம் ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகத் தெரிகிறது. ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட போது, அவரைப் பொற்கொல்லர் தொழில் செய்யும் வைத்தியர் ஒருவர் குணமாக்கினார் என்றும், அதற்கு நன்றியாகப் பொற்கொல்லர் (தட்டார்) சமுதாயமக்களுக்கு அவர்கள் குடியிருந்த பகுதியையும், நன்செய், புன்செய் நிலங்களையும் தானமாகக் கொடுத்தாகவும், மடம் ஒன்று கட்ட அனுமதி வழங்கியதாகவும் அது ‘தட்டார்மடம்’ என்று அழைக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்தியாக உள்ளது.

 

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் தென்பகுதி, சாத்தான்குளம் மறைவட்டத்தின் பங்குதளங்களின் எளிமையான மக்களைக் கருத்தாய்க் கொண்ட பங்கு தட்டார்மடம். அன்னை மரியாவின் தாயான புனித அன்னம்மாளை பாதுகாவலியாகக் கொண்டு, மக்கள் மனதில் "சந்தன மாதா" என்று அருள்பாவித்து வருகிறாள். தட்டார்மடத்தில் சிறு சிறு குழுக்களாக சமூக உணர்வுடன் இருந்தாலும், பழக்கவழக்கங்களிலும் சிந்தனைகளிலும் வேறுபாடு அவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை.

 

நாடார், தேவர், பிள்ளை, ஆசாரி, யாதவர், செட்டியார், ஆதிதிராவிடர், அருந்ததியர், குருக்கள், சவரத்தொழிலாளர், சலவைத் தொழிலாளர் எனப் பல சமூகத்தினரும் தட்டார்மடத்தில் இதுவரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அன்றே தட்டார்மடம் ஒரு ‘சமத்துவ புரமாக’ திகழ்ந்துள்ளது. தட்டார்மடத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் கி.பி. 1926க்கு முன் மூக்குப்பீறி அருகிலுள்ள பிரகாசபுரத்திலிருந்து குடியேறினர். அவர்கள் பனைத்தொழில் மற்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு தங்கள் இருப்பிடத்தை உறுதிசெய்தனர். கி.பி. 1944ல் சொக்கன்குடியிருப்பு பங்குப் பணித்தளத்தில் இருந்த 18 ஊர்களில் தட்டார்மடமும் ஒன்றாகும். தட்டார்மடத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழும் பகுதியை வடக்கூர் என்று இதர மக்கள் அழைத்தனர். வடக்கூர் மேற்குதெரு, கிழக்குத் தெரு, கம்மாளன் விளை, குருசடித் தெரு என்ற நான்கு பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

 

தொடக்கத்தில் தட்டார்மடத்தில் வழிபடுவதற்கு வதற்கு ஆலயம் கிடையாது. சொக்கன்குடியிருப்பு ஆலயம் சென்றுதான் வழிபட்டு வந்துள்ளனர். பின்பு, ஓலையால் ஆலயம் ஒன்றை இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்தில் அமைத்தனர். இவ்வேளையில் ஊர் நிர்வாகியாக இருந்தவரின் கனவில் தட்டார்மடத்தில் வசித்துவந்த ஒரு பெண்ணின் பெயரைக் (சந்தனம்) கூறி, அப்பெயரையே கோவிலுக்கு வைக்குமாறு சொல்லப்பட்டதாகச் செய்தி. ஆதலால் தான், மரியாளைப் பெற்றெடுத்த“சாங்தாஅன்னா” என்ற“புனிதஅன்னாள்” பெயரைக் கோவிலுக்கு வைத்துள்ளனர். ஆண்டுக்குக்கு நான்கு முறை, சைவம், பால்-பழம், மீன், ஆடு எனும் நான்கு வகையில் அசனம் வழங்கியுள்ளனர். அசனம் நடத்தி வந்த “அசனப்பறை” இப்போது புனித அந்தோணியார் கெபியாக உயர்ந்துள்ளது.

 

ஊர் தோன்றிய காலமுதலே இறந்தவர்கள் உடலை இப்பொழுது அடக்கம் செய்யும் (தேவசகாயம் பிள்ளை குருசடி முன்புற இடது) இடத்திலே அடக்கம் செய்துள்ளனர். அந்த இடத்தினை மேலத்தெருவில் குடியிருந்த அலசி என்பவர் விலைக்கு வாங்கியதாகத் தெரிகிறது. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சிற்றாலயம், பிற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தைச் சுற்றி முதலில் ஓரிரு குடும்பங்களே குடியேறியுள்ளன. பின்னர் நிறைய குடும்பங்கள் குடியேறிதாகத் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பு விழா, உயிர்ப்பு விழாக்களின் முந்தின நாள் இரவு வடக்கூர் மக்கள் பவனியாக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சிற்றாலயத்திற்குச் சென்று, மன்றாடிய பின்தான் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றுவந்துள்ளது. இன்றும் அப்பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

ஓலைக் கோவிலை மண்சுவர் எழுப்பி, ஓட்டுக் கூரையாக மாற்றியுள்ளனர். ஆண்டுதோறும் ஜுலை 26-ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டிய புனித அன்னாள் திருவிழா, பனையேறும் தொழிலை முதன்மையான தொழிலாக மக்கள் கொண்டிருந்ததால், ஜனவரி முதல் வாரத்தில் வருகின்ற ஞாயிறு அன்று பங்கு மற்றும் ஊர் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

 

1948-இல்; களிமண் கோவில் உடைக்கப்பட்டு, கற்கோவில் கட்டுவதற்கு அருள்தந்தை. இஞ்ஞாசியாரால் அடிக்கல் நடப்பட்டது. நிலத்தகராறு காரணமாக கட்டடப் பணி தாமதப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், அருள்தந்தை. மரியதாஸ் காலத்தில் ஆலயப்பணி தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. மேதகு ஆயர். அம்புரோஸ் மதலைமுத்து அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கபட்டது. ஆலயப்பீடமும் புனிதப்படுத்தப்பட்டது. 03.01.2002 அன்று மேதகு ஆயர். பீட்டர் பர்ணான்டோ அவர்களால் தட்டார்மடம் (அன்னாள் நகர்) புதிய பங்காக அறிவிக்கப்பட்டது. புதிய பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை. பீற்றர்ராஜா பொறுப்பேற்றார். அன்னாரது பெரு முயற்சியால் கோவில் மண்டபம் கட்டப்பட்டது. புனித அன்னாள் நடுநிலைப்பள்ளி, புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அருள்தந்தை.ஜோசப் அவர்கள் ஆலய பீடம், புதியகொடிமரம், ஆரோக்கிய அன்னைகெபி, அருள்பணியாளர் இல்லம் எனப் பல பரிமாணங்களில் தனது பணியைத் தொடர்ந்தார். அருள்தந்தை. ஜாண்பால் லோபோ மக்களை இசை வழியில் இறைவனை நோக்கி நடத்தினார். அருள்தந்தை. ஜோசப் இரத்தினராஜ் அவர்கள் ஊர் பெரியவர்களுடன் இணைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்த தொடக்கப்பள்ளியை புதிய பொலிவுடன் கட்டினார்.

 

இப்பங்கில் சுமார் 127 குடும்பங்கள் உள்ளுரிலும் ஏறக்குறைய 56 குடும்பங்கள் வெளியூரிலும் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் தளமாக திருவிழாக்கள் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது. 5 தெருக்களைக் கொண்ட பங்கு. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் (முருங்கை, பனை) மற்றும் தோட்டத்தை (தென்னை, மா) மையமாகக் கொண்டது. இருந்த போதிலும் மக்களின் அயராத உழைப்பால் சிலர் ஆசிரியராகவும் அரசுத்துறையிலும் மற்றும் சுயதொழிலிலும் சிறந்த விளங்குகிறார்கள். மக்களின் கல்வி வளர்ச்சிப் பணியில் புனித அன்னம்மாள் ஆரம்பப்பள்ளி மற்றும் புனித அன்னம்மாள் உயர்நிலைப்பள்ளிகளின் பங்கு சொல்லில் அடங்காதவை.

 

Succession of parish priests:

1. Rev.Fr. Peter Raja - 2002 - 2007

2. Rev.Fr. Joseph G- 2007 - 2010

3. Rev.Fr. John Paul Lobo - 2010 - 2013

4. Rev.Fr. Joseph Rathinaraj - 2013 - 2018

5. Rev.Fr. Santhiago - 2018 - 2020

6. Rev.Fr. Joseph Stalin - 2020 - 2022

7. Rev.Fr. Kalai Selvan - 2022 - 2025

8. Rev.Fr. G.Prathap - 2025 - Till now

bottom of page